Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

கூழாங்கல் நினைவுகள்


கரைந்த காலத்தின்
எண்ணக் கரைசல்கள்,
கடற்கரையில் பொறுக்கிய
வெளுத்த பூமிகள்
என் பிஞ்சு கைகளில்...

தரையில் நடந்து
மனதில் மிதந்து,
நீந்தாக் கடலலைகளில்
சிக்கி மீண்ட
ஆனந்த மனச்சோர்வுடன்
உருண்டு புரளும் மணலில்
நான் கட்டி சரிந்த
மனக்கோட்டை;

அவற்றை நினைத்து
இன்னும் 'துடிக்கிறது'
என் முதிர்ந்த இதயம்,
கண்களிலிருந்து நீர்வீழ்ச்சி;
மாற்றுப்பாதையில்
அக்கடல்நீரே!
நான் உயிருடனிருப்பதன் சாட்சி.

90'ல் பிறந்தவர்கள் (90's Kids)


வாழ்க்கையில் இயற்கையையும்
இயந்திரங்களையும் இரசித்த
ஒரே தலைமுறையாக நாங்கள்!
எல்லாவற்றையும் வியந்து
பார்த்தவர்கள்...

இணையத்தில் இந்திரனாக இளையவர்கள்,
இயந்திரங்களை இடையூறாக பெரியவர்கள்;
இவர்களுக்கு மத்தியில் நாங்கள்,
குழப்பத்தின் கிளையில்
தலைகீழாக தொங்குகிறோம்!!

காதல் அம்புகள் திசைமாறின---
தேவதைகளுக்கு காத்திருந்தே
எங்களின் வாழ்க்கை தேய்ந்தது,
எங்கள் வயது பெண்கள்
எல்லாம் திருமண சந்தையில்
வெகுவிரைவில் விலை போனார்கள்;
கனவால் கன்னிகழியாத
நாங்கள், மீண்டும் பிறந்தாவது
அப்பாவி தேவதைகளை
மணம் முடிப்போம்.

மனிதம்


நீ வழுக்கி விழுந்தாய்,
என் கை பிடித்தது;
நான் வழுக்கி விழுந்தேன்,
உன் கை பிடித்தது;
நம்மை தூக்கியது கடவுள்!

கண்ணுக்குத் தெரியாத
உயிரின் வருடல்,
காதுக்குக் கேட்காத
ஆன்மாவின் குரல்,
வாழும் மனிதம்!!

இருளின் அழைப்பு



தினசரி பொதுவாக நிகழும்
இதிகாச திருமணத்திற்கு
அழைப்பிதழாக வானம்,
அதில் வண்ணமயமான இருள்;

சூரியனுக்கும் சந்திரமதிக்கும்
மாலையில் திருமணம்,
இருமணி நேரத்தில் ஆயிரம்
குழந்தைகள்--- விண்மீன்கள்;

இப்படியாக காதலின் அழைப்பு:
இன்றே நேற்றைய அழைப்பு,
இது நாளைய அழைப்பு,
நாளை மற்றுமொரு அழைப்பு!

தீக்குளிப்பு



ஐயோ, இது கொலைகள்
நிறைந்த வாழ்க்கையடா;
கசாப்புகடைக்கு ஆட்டை
விற்றவனுக்கு, தாய்ப்பாசம்!

பெற்ற ஆடு கைவிட்ட
குட்டியைச் சுமந்தவன்,
துள்ளிச் சென்ற குட்டியின்
பின் அயராது ஓடியவன்;

அக்குட்டி வளர்ந்து ஆடாக
இவனுக்கும் வெள்ளி நரைமுடி,
முதுமையில் பணப்பசி---
ஆட்டை அறுக்க விற்றான்.

அன்றிரவே பிறந்தது ஒளி,
தேவலோகத்தில் ஒரு ஆடு;
மனசாட்சிப்படி இவனுக்கு
தினமும் "தீ"ராத் தீக்குளிப்பு...

இணைய வழி கல்வி


கடலான கல்வி
கரை கடந்தது இன்று---
நிலத்திலும் வானிலும்,
அறிவு வெள்ளம்!

சாக்கடையாக சாதிகளும்,
கூவமாக மதங்களுமில்லாத
"உடனுழை" கற்றலின் எழுச்சி,
இணையத்தின் புரட்சி!!

காலம் காகிதங்களை
கிழித்தெறியலாம்,
காற்றில் பரவும் அழியா
அறிவுத்தொற்றுகளை?

மின்னல் வேகத்தில்
கல்வியின் எதிரொலி,
மின்னஞ்சலில் மின்சான்றிதலாக
புதிய உருவத்தில் சரஸ்வதி.


வராத தூக்கம்!



இருண்ட வானில்
நட்சத்திரங்களே இல்லை,
மனதுக்குள் ஆயிரம்
ஒளிர்கின்றன;

விழிகள் பாரத்தினால்
போர்த்திக் கொண்டன,
மூளைக்கும் இதயத்திற்கும்
ஓயாத பனிப்போர்...

(சுடு)காடு


இயற்கையோ எங்களுக்கு
கொடுத்தது, ஒரு முத்தம்!
நாங்களோ இயற்கையோடு
நடத்தினோம், ஒரு யுத்தம்!!

நம்பிக்கை துரோகிகளாக
இயற்கையை வென்றோம்;
வனவிலங்குகள் அத்துமீறல்
என்று அவற்றையும் கொன்றோம்;

நவீனமாக மாசுபடுத்திய காற்றே
எங்களுக்கு உயிர்குடி விஷமானது,
நாங்கள் வெட்டிய மரங்களின்
இரத்தம் செக்கச்சிவந்த ஆறானது.

தோல் போர்த்தி உடல் மெலிந்த
நாங்கள், நடைபிணங்கள்.
இன்னும் மனித வேட்டையில்
இயற்கையின் ஆன்மா...

இவளின் அவலம்


விண்ணிலிருந்து மண்ணில் பிறந்த
தேவதைகளுக்கு, கள்ளிப்பால்
அபிஷேகம்--- உடனடி வீடு திரும்பல்!

காட்டுமிராண்டித்தனமான கலாச்சார
சந்தையில் இவளொரு சுமைதாங்கி,
இவளுக்கு மட்டுமே கற்பும் காப்பும்;

எழுதித் தீர்த்தாலும் வலிகளைச் சுமக்கும்
சொற்களுக்கு எடை கூடுவதில்லை...
எக்காலத்தில் இவளுக்கு விடியும்?

இவளின் ஓங்காத கைக்குப் பூட்டிய
சங்கிலியை உடைத்தெறிய இவளுக்குப்
பிறப்பாள், இன்னொரு இலக்கியப் பெண்!!

இந்த புல்லே போதும்


இந்த காட்டு வாழ்க்கையில்
ஆடுகளாக நாம்,
ஒரு காரியத்தை ஒதுக்க
ஓராயிரம் காரணங்கள்;

புல்லை மேய்ந்த நம்
இரைப்பை கசாப்புகடையில்,
நம்பிக்கையை கேடயமாக்கி
நீ மந்தையிலிருந்து பயணி;

வேலியைத் தாண்டினால்
நாம் பயிறை மேயலாம்,
மனச்சிறையை உடைத்தெறி
சிங்கங்களை ஆள்வோம்!

ஐயோ!! கனவு கலைந்தது,
கசிந்தது என் இரத்தம்!
எந்த கசாப்புகடையில்?
நான் கத்தி முனையில்!!!

லட்சியத்துடன் வேட்டையாடும்
புலியல்ல நாம்.
உண்மையில், பசிக்கு மேயும்
வெறும் ஆடுகள் தானே;
நமக்கு இந்த புல்லே போதும்...

யார் வாசித்த புல்லாங்குழல்?


காதில் மழைச் சாரல்,
அது காதல் மழையின் தூறல்;
நெஞ்சத்தை வருடும் இசை,
அடர்ந்த காட்டிற்குள் நுழையும் திசை;

அங்கு ஏதோ ஒரு கண்ணன்!
என் காவியத்தில் அவன் மன்னன்;
மயிலிறகின் வண்ணமுடைய நிலம்,
அதைப்பார்த்து உறைந்தது என் நலம்;

அவன் உதட்டில் தேங்கியுள்ள அன்பு,
கிழித்தது என் இதயத்தை காதல் அம்பு;
ஆழ்மனதை கவ்வியிழுக்கும் நீலக்கண்,
நானோ பருவமடைந்த ஒரு வெகுளிபெண்!!

இசை படர்ந்த அழகிய வனம்,
சொக்கி அலையும் நீண்ட வானம்;
அக்காட்சியை சுமந்து தவிக்கும் என் விழி,
கசிந்த இசையாக தெய்வத்தின் மொழி;

திடீரென்று ஒலியை மிஞ்சிய ஒளி,
மறைந்த அவனால் எனக்கு கண்ணீர்த்துளி;
உறக்கம் கலைந்து வாடிய என் சூழல்,
மீண்டும்!!! அது யார் வாசித்த புல்லாங்குழல்?

நாமே சிற்பி! நாமே சிலை!!


இம்மண்ணில் யாரோ இறந்த
அறிஞர்களின் விதையில்,
தவறி முளைத்த கரடுமுரடான
"பா"றைகளாக நாம்!

கல்வியாகிய கணமான
உளியெடுத்து, நம்மை நாமே
ஒரு மிகத் தரமான சிற்பமாகச்
செதுக்கிக் கொண்டிருக்க;

கழி(கரை)ந்து விழும் கற்களுடன்
பிடியின் அதிக (மன)அழுத்தத்தால்,
மனிதநேயமும் உருண்டோடுகிறது
ஏதோ அ"நா"வசிய உறுப்பாக...

கருங்குதிரை



நிற்காத ஓட்டம் என்பதே வாழ்க்கை,
இந்த சாபத்தை வரமளித்தது இயற்கை!
மனிதனுக்கு நானும் ஒரு வாகனம்,
உண்மையில் நானோ--- வெறும் நடைபிணம்;

குருட்டு உலகத்தில் நிற வேறுபாடு,
யாருக்கும் கேட்காது என் கூப்பாடு;
வேகத்தில் காலத்தைக் கடந்தவன்,
முதலாளியை முதுகில் சுமந்தவன்;

சதுரங்கத்தில் மட்டுமே மகத்துவம்,
வெண்மைக்கும் கருமைக்கும் சமத்துவம்!!
முதிர்ந்தாலும் எனக்கு வராது நரை,
நானோ அரசனை வெட்டும் கருங்குதிரை...

திசைப்பூனை


பசிப் பிணியால் துடித்த
வறுமைப்பூனை,
நடக்கும் எத்திசைக்கும்
கெட்ட சகுனம்;

தின்று கொழுத்த
மனிதனின் தூக்கம்,
மதியற்று விதியை நம்பும்
ராசியான குருடனிவன்;

உற்சாகப்பூனை
அங்கு உணவு தேட,
உறங்கிய மடையன்
ஊர் சுற்ற எழுந்தான்.

பரிதாபப்பூனை
பசியால் அலைய,
பைத்தியகார மனிதன்
தெருவில் நடந்தான்;

அப்பாயும் பூனை
"குருவிக்கு புலியாக",
குறுக்கே வந்த முட்டாளுக்குக்
கெட்ட சகுனமாம்!!

வீடு திரும்பிய சோம்பேறி
இவனுக்குத் தெரியாது,
அது தன் உழைப்பால்
சகுனமற்ற திசைப்பூனை...

அவளே அவள் தான்


அதோ! அவள் நிலத்தை
நிழலென வருடி வருகிறாள்,
குளிர்ந்த நிலவான முகத்தில்
இரு தீப்பந்தங்கள்--- விழிகள்;

அந்த செவ்விதழ்கள் என்னை
மட்டுமே அடைத்துப் பூட்டிய சிறை;
அவளின் பற்கள் கண்ணாடித்
துண்டுகள், என் இதயத்தை கிழித்தன.

இதயத் தழும்புகளை மறைக்க,
காதலை காய்ச்சி ஊற்றினேன்;
என் கொதித்து துடிக்கும் இதயம்
அவளது ஒரே பார்வையில் சரணம்.

ஊமைக்கிளி


சுதந்திரக்கிளி வானத்தை வருட,
மனக்கூண்டில் சிக்கிய மனிதன்!
சிறகடித்துத் திரிந்த கிளிக்கு,
நண்பனின் அறையாய் கூண்டு;

பேசும் நட்பு கிளியின் அருகே,
பேசாத கிளிக்குத் தண்டனை!!
வலியைத் தாங்கும் புரட்சிக்கிளி,
பேசும் திறமையற்ற ஊமைக்கிளி;

அந்த நாகரிகமான பைத்தியகார
மனிதனுக்குத் தெரியாது---
அது வானத்தை ஆளப்பிறந்த,
பருந்தாகப் "பறக்கும்" கிளி...

Wednesday, May 6, 2020

வாழ்க்கை ஒரு வெள்ளைத் தாள், உன் கையில் பேனா

வாழ்க்கை ஒரு வெள்ளைத் தாள், உன் கையில் பேனா


இறைவனின் கால புத்தகத்தில், ஒரு வெள்ளைத் தாளாக வாழ்க்கை;
அதில் அழியா சொற்களை பதிக்கும் பேனா, உன் விரல்களில் வசம்.
தன்னம்பிக்கையுடன் எதையும் சுயமாக எழுது, உன் ஆசான் இயற்கை;

இரத்த மையை ஊற்றி உயிரூட்டும் பேனா, மருத்துவரின் உயிர்நாடி;
முடிவு மையை ஊற்றி தீர்ப்பெழுதும் பேனா, நீதிபதியின் செங்கோல்.
தொழில்களைத் தேர்ந்தெடுப்பது அவரவர் பேனா(நா)வின் இயக்கமடி!

ஷேக்ஸ்பியர் மறைந்தாரா? ஜெயகாந்தன் இறந்தாரா? சொல்;
கிறுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே உயிர் பிழைத்து இவ்வுலகில் வாழும்.
பேனாவின் முனையால் வாழ்க்கையை செதுக்கு, சிற்பமாகுமது நம்பிச்செல்;

திறமையும் பிறப்பும் முரண்பாடு, கோட்பாடுகளை ஊடுருவிய விழிகள்;
வைகோட்ஸ்கியின் கருத்தைப் படி, நீ வைர வாளாக அவதரிப்பாய்!!
வாழ்க்கை வீட்டிற்கு ஜன்னல்களாக வறுமையின் பின்வரும் இன்னல்கள்;

எழுது, எழுது, எழுதிக்கொண்டேயிறு, நான் இங்கு எதுவும் எழுதவில்லை;
இவன் கடவுளாகிய எழுத்தாளர் அல்ல, நூல்களை அடுக்கும் நூலகர் தான்!!!
உன் தலையெழுத்தை நீயே எழுது, எழுத்துக்கள் உறைவதில்லை...

குறிப்பு:
இக்கவிதை நீலவிழிகள் காலாண்டிதழ் நடத்திய இணையவழி கவிதைப் போட்டியில் NVCS097 என்று எண்ணிட்டு அடுக்கப்பட்டது. (06/05/2020)

சான்றிதழ்:


நன்றி!!!

* * * * *

Saturday, April 25, 2020

அஸ்திவாரங்களின் கனவுகள்

அஸ்திவாரங்களின் கனவுகள்



ஒருவருடைய கனவால் ஒரேநேரத்தில் ஆறு அஸ்திவாரங்கள் போடப்பட்டன:
ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கனவுகள், ஆஹா! ஆஹா!!

ஒன்று மாபெரும் கோவிலாகக் கட்டப்பட கடுந்தவமிருந்தது,
வெறும் கல்லாலான கடவுளை தன் கருவரையில் சுமக்க;
இரண்டாவது செக்கச்சிவந்த காவல்நிலையமாகத் துடித்தது,
கயவர்களை கண்டபடி அடித்துத் திருத்த;

மூன்றாவது ஒரு தலைசிறந்த கல்லூரியாக ஆசைப்பட்டது,
தன்னை இகழும் பேதைகளையெல்லாம் மேதைகளாக்க;
நான்காவது அன்பார்ந்த முதியோர் இல்லமாக கண்ணீர் வடித்தது,
நரைமுடியுடன் கைவிடப்பட்டவர்களை கைவிடாமல் காக்க;

ஐந்தாவது பேரழகான மண்டபமாக வடிவமைக்கப்பட ஆவலானது,
கல்யாண நிகழ்ச்சிகளென்று மனிதர்களை இணைத்துக் குதூகலப்படுத்த;
ஆறாவது மிகப்புனித மருத்துவமனையாக பக்குவப்பட்டது,
சாகும் உயிர்களுக்கு உணர்வூட்டி உயிரூட்ட;

அஸ்திவாரங்கள் போட்ட மனிதனின் அநாவசிய அலட்சியம்,
அவன் கையிலிருந்த காசு கடகடவென கரைந்தோடியது...
அவனின் கனவுகளுக்கு போடப்பட்ட அஸ்திவாரம் தடுமாறியது;

ஆறு அஸ்திவாரங்களின் கனவுகளும் கனவுகளாகவே கசிந்தன,
நிதர்சனத்தில் வாடகைக்கு விடப்படும் வீடுகளாகவே அவை அவதரித்தன;
அஸ்திவாரங்களின் அழியாக் கனவுகளுடன்...

குறிப்பு:
இக்கவிதை தலைமைச் செயலகத் தமிழ் மன்ற "கவிதைத் தொகுப்பு" மின்நூலில் இடம்பெற்றுள்ளது. (19/04/2020)



நன்றி!!!


* * * * *

Monday, March 16, 2020

அந்தப்புரம்

"உங்களால் சொற்களை காதலித்து புத்தகங்களை புணர முடிந்தால், நூலகமும் 'அந்தப்புரம்' தான்!"

Friday, March 13, 2020

பாதை

"சொர்க்கத்திற்கான பூட்டிய கதவைக் கண்டேன், என் கடின உழைப்பால் சாவி கிடைத்தது. சொர்க்க கதவை உற்சாகமாய் திறந்தேன், திறந்ததும் திடுக்கிட்டேன். ஏனெனில் அது நரகத்திற்கான பாதை!" 

இலக்கிய கவசம்

"வார்த்தைகளை வாளாக்கி,
உணர்ச்சிகளை கேடயமாக்கி,
பின்னப்பட்ட கவசமே 'இலக்கியம்'. "

அறம்

"அறமற்ற வெற்றியைக் காட்டிலும்
  அறமான தோல்வியே சிறந்தது."

இலக்கியம் உணர்த்தும் உண்மை

" 'பிறரின் வாழ்க்கை நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால் தான், நம் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை ரகசியமாக உணர்த்துகிறது இலக்கியம்."

விடுதலை

"உன் சிறகுகளை தயார்படுத்திக் கொள்,
உன் கூண்டு எந்நேரமும் திறக்கப்படலாம்."

சாதனைச் சிற்பி

" 'சிற்பம் செதுக்குதல்' என்ற ஒரே கலையினால்
கண்ணனையும் வடிவமைக்கலாம்
கம்சனையும் வடிவமைக்கலாம்.
அதற்கு சிற்பி, நாம் என்ன வடிவமைக்க போகிறோம்
என்பதை முன்பே முடிவு செய்திருக்க வேண்டும்."

இடையில் வாழ்க்கை

"இழந்ததிற்கும் கிடைக்கவிருப்பதிற்கும் இடையில் தான் வாழ்க்கை இருக்கிறது."

இருசக்கரங்கள்

"மக்களின் மனதில் நிரந்தரமாக வாழ்பவனுக்கு வெற்றியும் தோல்வியும் இருசக்கரங்கள்."

யார் ஆசிரியர்?

"தன் மாணவர்களை தான் வெற்றி பெற வேண்டும் என்பவன் 'கலைஞன்', தான் தோற்றாலும் தன் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பவன் 'ஆசிரியர்'."

சமூகமயமாக்கல்

"தற்போதைய காலத்தில் சமூகமயமாக்கல் மனிதனை அவமானப்படுத்தி கொடூர மிருகமாக மாற்றுகிறது."

அழகிய முகம்

"அழகிய மனம் உள்ளவர்களுக்கு,
அழகிய முகம் அவசியமில்லை.
அழகிய மனம் அற்றவர்களுக்குத் தான்,
அழகிய முகம் தேவைப்படுகிறது."

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்!!
(ஏ)மாற்றம் மாறிட, மாற்றம் வேண்டும்!
சாதி சமய சலசலப்பின்றி சாந்தமாய் உலகம் மாறிட, சமத்துவமான மாற்றம் வேண்டும்!

அரசியல்வாதிகள் அன்புடன் உழைத்திட,
அரசியல் பூசல்கள் மறைந்திடும் மாற்றம் வேண்டும்!
புதுமைப் பெண்கள் இரவில் இடம்பெயர,
ஆண்களின் அணுவிலும் மாற்றம் வேண்டும்!

கல்வியளித்திட மனிதம் வளர்த்திட,
இயந்திர ஆசிரியர்களிடமும் மாற்றம் வேண்டும்!
பழமையைப் போற்றிட புதுமையைப் பெருக்கிட,
மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும்!

கற்களை வைத்து கடவுளை படைத்திடும்,
சிற்பியின் கலையிலும் மாற்றம் வேண்டும்!
சொற்களை இணைத்திட உணர்ச்சிகள் ஊட்டிட,
கவிஞனின் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும்!

ஆஹா! மாற்றம் வந்தது, மாற்றம் வந்தது!!
நாட்காட்டியில் மட்டுமே மாற்றம் வந்தது!!!
பிறந்தது குழப்பம், 2020!

மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்!!
(ஏ)மாற்றம் மாறிட மாற்றம் வேண்டும்!
வாழ்க பாரதம்! வந்தேமாதரம்!!

வேறுபாடுகள்

"வேறுபாடுகளை போற்றவோ தூற்றவோ வேண்டாம், மதித்தால் போதுமானது."

நடிகன்

"தன் கதாபாத்திரத்தை மதிக்க தெரிந்தவன் மட்டுமே, தான் ஒரு நடிகன் என்று கூற தகுதியுடையவன்."

இலக்கிய போதை

"இலக்கியவாதிகளால் போதைப்பொருள்கள் இன்றியும் முழுநேர போதையிலேயே இருக்க முடியும்."

ஒரு சாதாரண ஆத்மா

"நான் மனிதன் என்று கூறுவதே ஒரு வகையில் பாகுபாடு தான். ஏனெனில் நான்- மிருகங்கள், செடிகள் மற்றும் பூச்சிகளுக்கு நிகரான, 'ஒரு சாதாரண ஆத்மா!' "

முப்பிழைகள்

"சொற்பிழையும் எழுத்துப்பிழையும் வரலாம். ஆனால் வாக்கியப்பிழை மட்டும் வரவே கூடாது, வாழ்க்கையில்!"

நண்பனாக

"நீ வெற்றி பெற்றால் உனக்கு கைதட்ட ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் நீ தோற்றாலும் உனக்காக கைதட்ட நான் இருக்கிறேன், ஒரு உண்மையான நண்பனாக!"

கண்ணோட்டம்

"இரவில் சுற்றி பரவியிருக்கும் அசுர இருளைக் கண்டு அஞ்சுவதும் வான்வெளியில் துள்ளி விளையாடும் வின்மீன்களைக் கண்டு உள்ளம் நெகிழ்வதும் பார்ப்பவரின் கண்ணோட்டத்தில் தான் உள்ளது."

ஆளுமைத்திறன்

என் கண்ணோட்டத்தில், பிடித்த ஒரு செயலையும் பிடிக்காத ஒரு செயலையும் ஒரே அளவு ஈடுபாட்டுடன் செய்பவரே 'ஆளுமைத்திறன் மிக்கவர்!' "

நழுவிச் செய்த கொலை

"நம் வாயிலிருந்து வரும் வன்மையான வார்த்தை, நாம் காய் வெட்ட வைத்திருக்கும் கத்தி நம் கையில் இருந்து நழுவிச் சென்று நம் நண்பனை குத்திய கொலையைப் போன்றது."

எழுத்துக்கள்

"எழுத்துக்கள் ஆக்கப்பூர்வமானது மட்டுமல்ல அதிகாரப்பூர்வமானதும் கூட."

மனிதம்

"நான் ஒரு மனிதாபிமானி!
மனிதர்களை கட்டாயமாக ஜாதி, மதம், மொழி, உருவம், நிறம், நடத்தை மற்றும் இன வேறுபாடின்றி காதலித்தே தீரவேண்டும் என்று வலியுறுத்துகிறது 'மனிதம்'."

வாழ்க்கையின் நோக்கம்

"நீண்டநாள் உயிர் வாழ்தல் என்பது வாழ்க்கையின் நோக்கமாய் இருத்தல் கூடாது, மகிழ்ச்சியாக வாழ்தல் அல்லது சாதனை புரிதல் - இதில் ஒன்றுதான் வாழ்க்கையின் நோக்கமாய் இருத்தல் வேண்டும்."

கல்வி

"மனிதனை வாழ வைப்பது, பணம்!
மனிதனை மனிதனாக வாழ வைப்பது, கல்வி!!"

தோல்வி

"வெற்றி பெறுவது யாராக இருந்தாலும் சரி, கொண்டாடுவது நாமாக இருக்க வேண்டும். தோல்வியும் கொண்டாடப்படும் தகுதியுடையது, நம் முயற்சி அதனுள் இருப்பதனால்."

வழிகாட்டி

"வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் புத்தகம் என்னும் காலப்பயண இயந்திரத்தை இயக்கி, பல காலங்கள் கடந்து நம்மை கதைக்குள் அழைத்துச் சென்று, கதாபாத்திரங்களுக்கு இடையில் நாம் தொலைந்து விடாமல் வழிநடத்தும் சுற்றுலா 'வழிகாட்டி!' "

நிலையானது

"உயிர்கள் நிலையானதல்ல, ஆனால் அவற்றின் நினைவுகள் நிலையானது."

இடம்பெறுவான்

"தட்டிக்கேட்பவன் வரலாற்றில் இடம்பெறுவான்! தட்டிக்கொடுப்பவன் உள்ளத்தில் இடம்பெறுவான்!!"

வெற்றி

"உளவியல் ரீதியாக வெற்றி என்பது ஒருவரின் திறமையால் கிடைக்காது, அவரின் நடத்தை சுற்றுப்புறத்தால் வலுவூட்டப்பட்டதின் விளைவே 'வெற்றி!' "

முயற்சி

"அதிர்ஷ்டத்திற்கும் முயற்சிக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான். முதன்முறையாக நீ வெற்றி பெற்றால், அது உன் அதிர்ஷ்டம்! இரண்டாம் முறையும் நீயே வெற்றி பெற்றால், அதில் பளிச்சிடுவது உன் முயற்சி!!"

ஒரு செருப்படி

"அவளின் சிரிப்பு என்னை செருப்பால் அடித்ததைப் போன்றுள்ளது.
அதனால் தான், நான் மீண்டும் கேட்டேன் 'ஒரு செருப்படி!' "

நீ நீயாக வாழ்

"உன்னை இந்த உலகத்திற்காக ஒருபோதும் மாற்றிக்கொள்ளாதே, அப்படி ஒரு நாள் இந்த உலகத்திற்கு உன் உதவி தேவைப்பட்டால் நீ எப்படியும் தேர்ந்தெடுக்கப்படுவாய். எனவே, உனக்காக வாழ்! நீ நீயாக வாழ்!!"

தற்கொலை

"என்னை நேசிக்க மனமில்லாதவருக்கும் நேரமில்லாதவருக்கும் நான் தக்கசமயத்தில் உதவி செய்தால், அது தற்கொலைக்குச் சமம்!"

சமூகவிரோதிகள்

"சமூகவாதிகளே தங்களின் மென்மையான குணத்தில் விரிசல் ஏற்பட்டு, கசப்பான நாட்களினால் காயம்பட்டு, சமூகவிரோதிகளாக மாறுகின்றனர்."

Thursday, March 12, 2020

கல்விக்கு பரிசு

தேர்வறையிலுள்ள ஆசிரியருக்கு,
              நான் எதாவது எழுதலாம் என்று நினைக்கும் போது, 'என் பேனா முனையில்' வரும் எழுத்துக்கள் 'குத்தி உங்கள் நெஞ்சம் கிழிந்துவிடுமோ?' என்ற எண்ணத்தில் வெள்ளை காகிதங்களையே நான் தருகிறேன்,  உங்களின் கல்விக்கு பரிசாய்!!! 

துரோகம்

"கண்ணை நீ நம்பினால், முதல் குருடன் நீ தான்! காதை நீ நம்பினால், முதல் செவிடன் நீ தான்! ஒழுக்கத்தை விட இரக்கம் வலியது, அழகிய இவ்வுலகில். இறைவன் கொடுத்த வாழ்க்கையை நீ இரசித்து வாழவில்லை என்றால், அது நீ அவருக்கு செய்யும் துரோகம்."

எதார்த்தவாதிகள்

"வெறுக்கத்தக்க மனிதர்கள் தான் வெகுகாலமாக எதார்த்தவாதிகளாக இருக்கிறார்கள்."

கௌரவம்

"அடுத்தவரின் உழைப்பினால் நான் அடையும் ஒரு வெற்றியை காட்டிலும், என் உழைப்பினால் நான் அடைந்த 1000 தோல்விகளே எனக்கு 'கௌரவம்'."

சக்தி

"நீ முடியும்வரை உன் எல்லா உணர்வுகளையும் அடக்கிய பின்பும் கூட,
சீரிப்பாய்ந்து வரும் தனி உணர்வே,
உன் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி!!!"

Tuesday, March 10, 2020

டிஜிட்டல் கல்வெட்டு

"ஒரு கூட்டம் என் எழுத்துக்களின் வடிவத்தை பார்த்து 'கல்வெட்டு' என்றது.
அதனால் தான், நான் 'டிஜிட்டல் கல்வெட்டு'களை படைக்க முயல்கிறேன்."