Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

கூழாங்கல் நினைவுகள்


கரைந்த காலத்தின்
எண்ணக் கரைசல்கள்,
கடற்கரையில் பொறுக்கிய
வெளுத்த பூமிகள்
என் பிஞ்சு கைகளில்...

தரையில் நடந்து
மனதில் மிதந்து,
நீந்தாக் கடலலைகளில்
சிக்கி மீண்ட
ஆனந்த மனச்சோர்வுடன்
உருண்டு புரளும் மணலில்
நான் கட்டி சரிந்த
மனக்கோட்டை;

அவற்றை நினைத்து
இன்னும் 'துடிக்கிறது'
என் முதிர்ந்த இதயம்,
கண்களிலிருந்து நீர்வீழ்ச்சி;
மாற்றுப்பாதையில்
அக்கடல்நீரே!
நான் உயிருடனிருப்பதன் சாட்சி.

90'ல் பிறந்தவர்கள் (90's Kids)


வாழ்க்கையில் இயற்கையையும்
இயந்திரங்களையும் இரசித்த
ஒரே தலைமுறையாக நாங்கள்!
எல்லாவற்றையும் வியந்து
பார்த்தவர்கள்...

இணையத்தில் இந்திரனாக இளையவர்கள்,
இயந்திரங்களை இடையூறாக பெரியவர்கள்;
இவர்களுக்கு மத்தியில் நாங்கள்,
குழப்பத்தின் கிளையில்
தலைகீழாக தொங்குகிறோம்!!

காதல் அம்புகள் திசைமாறின---
தேவதைகளுக்கு காத்திருந்தே
எங்களின் வாழ்க்கை தேய்ந்தது,
எங்கள் வயது பெண்கள்
எல்லாம் திருமண சந்தையில்
வெகுவிரைவில் விலை போனார்கள்;
கனவால் கன்னிகழியாத
நாங்கள், மீண்டும் பிறந்தாவது
அப்பாவி தேவதைகளை
மணம் முடிப்போம்.

மனிதம்


நீ வழுக்கி விழுந்தாய்,
என் கை பிடித்தது;
நான் வழுக்கி விழுந்தேன்,
உன் கை பிடித்தது;
நம்மை தூக்கியது கடவுள்!

கண்ணுக்குத் தெரியாத
உயிரின் வருடல்,
காதுக்குக் கேட்காத
ஆன்மாவின் குரல்,
வாழும் மனிதம்!!

இருளின் அழைப்பு



தினசரி பொதுவாக நிகழும்
இதிகாச திருமணத்திற்கு
அழைப்பிதழாக வானம்,
அதில் வண்ணமயமான இருள்;

சூரியனுக்கும் சந்திரமதிக்கும்
மாலையில் திருமணம்,
இருமணி நேரத்தில் ஆயிரம்
குழந்தைகள்--- விண்மீன்கள்;

இப்படியாக காதலின் அழைப்பு:
இன்றே நேற்றைய அழைப்பு,
இது நாளைய அழைப்பு,
நாளை மற்றுமொரு அழைப்பு!

தீக்குளிப்பு



ஐயோ, இது கொலைகள்
நிறைந்த வாழ்க்கையடா;
கசாப்புகடைக்கு ஆட்டை
விற்றவனுக்கு, தாய்ப்பாசம்!

பெற்ற ஆடு கைவிட்ட
குட்டியைச் சுமந்தவன்,
துள்ளிச் சென்ற குட்டியின்
பின் அயராது ஓடியவன்;

அக்குட்டி வளர்ந்து ஆடாக
இவனுக்கும் வெள்ளி நரைமுடி,
முதுமையில் பணப்பசி---
ஆட்டை அறுக்க விற்றான்.

அன்றிரவே பிறந்தது ஒளி,
தேவலோகத்தில் ஒரு ஆடு;
மனசாட்சிப்படி இவனுக்கு
தினமும் "தீ"ராத் தீக்குளிப்பு...

இணைய வழி கல்வி


கடலான கல்வி
கரை கடந்தது இன்று---
நிலத்திலும் வானிலும்,
அறிவு வெள்ளம்!

சாக்கடையாக சாதிகளும்,
கூவமாக மதங்களுமில்லாத
"உடனுழை" கற்றலின் எழுச்சி,
இணையத்தின் புரட்சி!!

காலம் காகிதங்களை
கிழித்தெறியலாம்,
காற்றில் பரவும் அழியா
அறிவுத்தொற்றுகளை?

மின்னல் வேகத்தில்
கல்வியின் எதிரொலி,
மின்னஞ்சலில் மின்சான்றிதலாக
புதிய உருவத்தில் சரஸ்வதி.


வராத தூக்கம்!



இருண்ட வானில்
நட்சத்திரங்களே இல்லை,
மனதுக்குள் ஆயிரம்
ஒளிர்கின்றன;

விழிகள் பாரத்தினால்
போர்த்திக் கொண்டன,
மூளைக்கும் இதயத்திற்கும்
ஓயாத பனிப்போர்...