Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Saturday, April 25, 2020

அஸ்திவாரங்களின் கனவுகள்

அஸ்திவாரங்களின் கனவுகள்



ஒருவருடைய கனவால் ஒரேநேரத்தில் ஆறு அஸ்திவாரங்கள் போடப்பட்டன:
ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கனவுகள், ஆஹா! ஆஹா!!

ஒன்று மாபெரும் கோவிலாகக் கட்டப்பட கடுந்தவமிருந்தது,
வெறும் கல்லாலான கடவுளை தன் கருவரையில் சுமக்க;
இரண்டாவது செக்கச்சிவந்த காவல்நிலையமாகத் துடித்தது,
கயவர்களை கண்டபடி அடித்துத் திருத்த;

மூன்றாவது ஒரு தலைசிறந்த கல்லூரியாக ஆசைப்பட்டது,
தன்னை இகழும் பேதைகளையெல்லாம் மேதைகளாக்க;
நான்காவது அன்பார்ந்த முதியோர் இல்லமாக கண்ணீர் வடித்தது,
நரைமுடியுடன் கைவிடப்பட்டவர்களை கைவிடாமல் காக்க;

ஐந்தாவது பேரழகான மண்டபமாக வடிவமைக்கப்பட ஆவலானது,
கல்யாண நிகழ்ச்சிகளென்று மனிதர்களை இணைத்துக் குதூகலப்படுத்த;
ஆறாவது மிகப்புனித மருத்துவமனையாக பக்குவப்பட்டது,
சாகும் உயிர்களுக்கு உணர்வூட்டி உயிரூட்ட;

அஸ்திவாரங்கள் போட்ட மனிதனின் அநாவசிய அலட்சியம்,
அவன் கையிலிருந்த காசு கடகடவென கரைந்தோடியது...
அவனின் கனவுகளுக்கு போடப்பட்ட அஸ்திவாரம் தடுமாறியது;

ஆறு அஸ்திவாரங்களின் கனவுகளும் கனவுகளாகவே கசிந்தன,
நிதர்சனத்தில் வாடகைக்கு விடப்படும் வீடுகளாகவே அவை அவதரித்தன;
அஸ்திவாரங்களின் அழியாக் கனவுகளுடன்...

குறிப்பு:
இக்கவிதை தலைமைச் செயலகத் தமிழ் மன்ற "கவிதைத் தொகுப்பு" மின்நூலில் இடம்பெற்றுள்ளது. (19/04/2020)



நன்றி!!!


* * * * *